பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற சீனியர் பெடரேஷன் கோப்பைக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்து உள்ளனர்.
24-வது சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஒட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 50.16 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
அதே ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீரர் சந்தோஷ் குமார் 51.49 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்கள் பிரிவில் நடந்த 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை வித்தியா ராமராஜ் 59.59 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முன்னணி அசாம் வீராங்கனை ஹீமா தாஸ் 23.21 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்தார்.
தமிழக வீராங்கனை தனலட்சுமி 23.26 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 23.60 வினாடிகளில் வந்து வெண்கலம் வென்றார்.
இதில் முதலில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான தகுதி சுற்று ஆட்டத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமி 23.26 வினாடிகளில் வந்து 1998 ஆண்டு பி.டி. உஷாவின் 23.30 வினாடிகள் சாதனையை முறியடித்தார்.