2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையாக தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவரான பவானி தேவி தண்டையார்பேட்டையில் உள்ள முருகா தனுஷ்கோடி பெண்கள் மேனிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்துள்ளார். 2004ம் ஆண்டு முதன்முறையாக பள்ளியளவில் நடந்த வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டார் பவானி தேவி. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்ததன் காரணமாக உயர்கல்வி படிப்பை முடித்த அவர் கேரளாவின் தலசேரியிலுள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
அங்கு தீவிரமாக வாள்வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு துருக்கியில் தனது முதல் சர்வதேச அளவிலான காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின் உலகளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்ட பவானி தேவி பல பதக்கங்களை அள்ளிக் குவித்தார். 2014ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றார். இதனை கெளரவிக்கும் விதமாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மூன்று லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் பவானி தேவி அமெரிக்காவுக்கு சென்று பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்தார்.
2015ம் ஆண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ராகுல் ட்ராவிட் நடத்தி வரும் Go Sports Foundation தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களில் ஒருவராக பவானிதேவி தேர்வானார். எட்டு முறை தேசிய சாம்பியனான அவர் கடந்த 2016ஆம் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். அதிலிருந்து விரைவில் வெளியே வந்த பவானிதேவி அதற்கு அடுத்த ஆண்டிலேயே இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தார்.
சர்வேதச வாள்வீச்சுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் முதன்முறையாக தங்கம் வென்ற பெருமை பவானிதேவியையே சேரும். கடந்த 2017ம் ஆண்டு ஐஸ்லாந்தில் நடந்த டர்னாய் சாட்லைட் சாம்பியன்ஷிப் வாள்வீச்சுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இதற்கிடையே ஹங்கேரியில் நடந்த உலக கோப்பை வாள் சண்டைபோட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் ஒரு அசாத்திய சாதனைப் படைத்துள்ளார் பவானி தேவி. இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்கு தகுதி பெற உலக தரவரிசை அடிப்படையில் ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்திற்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டது. தற்போது வாள் வீச்சுப் போட்டியில் உலகளவில் 45 வது இடத்தில் உள்ள பவானிதேவி தரவரிசை அடிப்படையில் இரண்டு இடங்களில் ஒன்றை தக்கவைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனையாக தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் பவானி தேவிக்கு தெரிவித்து வருகின்றனர்.