இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 312 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்துள்ளது.
சிட்னியில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களையும், இந்தியா 244 ரன்களையும் சேர்த்தன. இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவான நேற்று 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 4ம் நாளான இன்று தனது 2வது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. மார்னஸ் லபுஸ்கனே, ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறப்பாக விளையாடவே ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
மார்னஸ் லபுஸ்கனே 73 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேமரூன் க்ரீனும் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதன்பின்னர் 407 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மான் கில் 31 ரன்னிலும், ரோஹித் சர்மா 52 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆட்ட நேர முடிவில் 98 ரன்களை இந்தியா எடுத்துள்ள நிலையில், வெற்றிக்கு மேலும் 309 ரன்கள் தேவைப்படுகிறது. போட்டி நிறைவடைய ஒருநாள் மட்டுமே உள்ளதால், வெற்றி பெற நாளைய ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.