அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆங்கில ஊடகத்தில் சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணிக்கு புதிதாக வந்தவர் டி.நடராஜன். டி20-யில் மிகப்பிரமாதமாக ஆடினார். ஹர்திக் பாண்டியா தனது தொடர் நாயகன் விருதையும் கூட டி.நடராஜனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவரின் யார்க்கர் நிறைந்த பந்து வீச்சு சிறப்பாக அமைந்திருந்தது.
ஐபிஎல் தொடரின் போதுதான், நடராஜனும் தன் முதல் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், அவர் தன் குழந்தையை பார்க்க உடனடியாக நாடு திரும்பவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்து அமீரகத்திலிருந்து நடராஜன் நேரடியாக ஆஸ்திரேலியா சென்றார். நடராஜனின் அபாரமான பந்து வீச்சைப் பார்த்த பிறகு டெஸ்ட் தொடருக்காக அவரை அங்கேயே தங்க வைத்தனர். அணியில் விளையாடுவதற்காக அல்ல. வலை பயிற்சியில் அவர் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்.
மேட்ச் வின்னரான அவர் இப்போது வலைப்பந்து வீச்சாளராக இருக்கிறார். ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகே நடராஜன் இந்தியா வந்து தன் முதல் குழந்தையை, முதல் முறையாகப் பார்க்க உள்ளார். ஆனால் , கேப்டன் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்புகிறார்.இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம். ஒருவருக்கு ஒரு விதி, இன்னொரு வீரருக்கோ மற்றொரு விதி. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வினை, நடராஜனை கேட்டு பாருங்கள் '' என்று கடுமையாக சாடியுள்ளார்.