சிட்னியில் நடைப்பெற்று வரும் இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அபாரமாக பந்து வீசி 20 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 முக்கிய விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். முதல் T20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பக்க பலமாய் இருந்த நடராஜன், இரண்டாவது போட்டியிலும் சிறப்பாகப் பந்து வீசி அசத்தியுள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. அடித்து ஆடுவதற்கு சாதகமான சிட்னி ஆடு களத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ரன் வேட்டையைத் தொடங்கினர். இந்திய தரப்பில் பந்து வீசிய சாகர், தாக்கூர் ஆகியோரின் பந்துகளை ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து நொறுக்கினர். எப்போதும் ரன்களைக் கட்டுப்படுத்தும் வாஷிங்டன் சுந்தரும் இன்று சிக்ஸர், பவுண்டரி என்று வாரி கொடுத்தார். ஓவருக்கு 10 + ரன் ரேட்டில் ஆஸ்திரேலியா புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த போதுதான் கோலி 5 வது ஓவரை வீச நடராஜனை அழைத்தார்.
முதல் ஓவரிலேயே, தனது துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களைக் கட்டுப்படுத்திய நடராஜன் முதல் விக்கெட்டாக டி.ஷார்ட்டை வீழ்த்தி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பிறகு, நான்காவது ஓவரில் ஹென்ரிக்யிட்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். யார்க்கர்களுடன் கூடிய கச்சிதமான பந்து வீச்சில் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு சமயம் 200 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், நடராஜனின் அருமையான பந்து வீச்சு அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 194 ரன்களே எடுக்க வைத்தது. நடராஜனின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவின் ரன் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால், 194 ரன்களை விரட்டி, இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்தியா இரண்டுப்போட்டிகளிலும் வென்று தொடரையும் வெல்ல நடராஜனின் பந்து வீச்சு பக்க பலமாய் இருந்துள்ளது.