இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா போலவே தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக மாறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக , இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. ஜாகீர் கான் , ஆஷிஸ் நெக்ரா ஆகியோருக்கு பிறகு தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்கு சிறந்த இடது கை பந்து வீச்சாளராக கிடைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் நடராஜன் பந்து வீசும் விதம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமை நினைவுபடுத்துகிறது. வாசிம் அக்ரம் போலவே மிக நேர்த்தியான யார்க்கர்களையும் நடராஜன் வீசுகிறார்.
ஜஸ்ப்ரித் பும்ராவுடன் நடராஜனும் இணைந்தால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூடுதல் பலம் பெற்று விடும். தற்போது, உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் பும்ராவுக்கும் நடராஜனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜஸ்ப்ரித் பும்ரா, நடராஜன் இருவருமே பேக்கப் வீரர்களாகத்தான் இந்திய அணியில் இடம் பெற்றனர். சக வீரர் காயமடைந்து வெளியேறியதால்தான் இருவருமே ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். பும்ரா மற்றும் நடராஜன் இருவருமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத்தான் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினர். இருவருமே தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில்தான் களமிறக்கப்பட்டனர். பும்ரா, நடராஜன் களமிறங்கிய தொடர்களில் ஒரே ஒரு ஆட்டத்தில்தான் இந்தியா வெற்றியும் கண்டது.
டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத்தான் சர்வதேச ஆட்டங்களில் பும்ராவும் நடராஜனும் களம் கண்டனர். இத்துடன், இந்த ஒற்றுமை முடிந்து விடவில்லை. இருவருமே களமிறங்கிய முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளையே வீழ்த்தினர். அதே போல, பும்ரா, நடராஜன் இருவருமே டி 20 தொடக்க ஆட்டத்தில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பும்ராவுக்கும் நடராஜனுக்கும் இடையே உள்ள இந்த ஒற்றுமைதான் வருங்காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை பந்து வீச்சாளராக நடராஜன் உருவெடுப்பார் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கின் ஒரு கண் பும்ரா என்றால் மற்றோரு கண்ணாக நடரஜன் அமைவார் என்று நம்புவோம்.