2021 ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இருப்பதால், ஜப்பான் டோக்கியோ கடலில் ஒலிம்பிக் வளையங்கள் மீண்டும் வைக்கப்பட்டன.
கொரோனோ ஊரடங்கால் உலகமே அடங்கிப்போனது. உலகில் நடைபெற இருந்த அனைத்து விழாக்களும் விளையாட்டுப்போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த வருடம் நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கூட துபாயில் பார்வையாளர்கள் இல்லாமலேயே நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.அதேப்போல் ஒலிம்பிக் போட்டிகள் என்ன ஆகும் என்ற ஐயத்தில் இருந்த போது, கொரோனோவை வென்று ஒலிம்பிக்கை நடத்திக்காட்டுவோம் என்று இன்று உலகம் ஒன்று சேர்ந்துள்ளது. அதே நம்பிக்கையில் ஒலிம்பிக்கை எடுத்து நடத்தும் நாடான ஜப்பானும் உற்சாகமாக தயாராகிறது.
அதற்கு அடையாளமாக ஜப்பான் டோக்கியோ கடலில் ஐந்து ஒலிம்பிக் வளையங்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் உள்ள கப்பலில் மீண்டும் அந்த வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
15 மீட்டர் உயரமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் அந்த வளையங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரவும் இந்த வளையங்கள் மின் விளக்குகளால் ஒளிரவைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்த வளையங்கள் முதலில் வைக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்படவே இந்த வளையங்கள் அகற்றப்பட்டன.
ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 15,400 வீரர்கள் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். அந்த வீரர்கள் பாதுகாப்பாக ஜப்பானுக்குள் வரலாம் என்ற நம்பிக்கையை ஒளிர விடுவது போல் இந்த ஐந்து வளையங்களும் ஒளிர்கின்றன.