பஹ்ரைனில் நடந்த ஃபார்முலா ஒன் பந்தயத்தில் கார்கள் உரசியதால் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து பிரான்ஸ் வீரர் உயிர் தப்பினார்.
பஹ்ரைனில் நேற்று நடைபெற்ற கிராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் ரொமெய்ன் க்ரோஸ்ஜான் பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் கார்கள் சீறிக் கொண்டு ஒன்றையொன்று முந்திச் சென்றன.
ரொமெய்னின் கார் மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றபோது, தனக்குப் பின்னால் வந்தவரை முந்திச் செல்ல குரோஸ்ஜான் முயன்றார். அப்போது இரு கார்களின் டயர்களும் உரசியதில் ரொமெய்னின் கார் பக்கவாட்டுத் தடுப்பில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் அவரது கார் 2 துண்டுகளாக உடைந்து நொறுங்கியது.
பந்தய மைதானத்தில் இருந்த ஊழியர்கள் விரைந்து சென்று கொளுந்து விட்டெரிந்த நெருப்பில் சிக்கிய ரொமெய்னை பத்திரமாக மீட்டனர்.
கால் மற்றும் விலா பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். விறுவிறுப்பான இப் போட்டியில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் 95வது முறை வெற்றியைப் பதிவு செய்தார்.
நடப்பு சீசனில் இதுவரை நடைபெற்ற 15 போட்டிகளில் பங்கேற்ற ஹாமில்டன் 11 முறை வெற்றி பெற்றுள்ளார்.