சர்வதேச அளவில் 100 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ பெற்றுள்ளார். முன்னதாக, ஈரான் வீரர் அலி தாய் மட்டுமே சர்வதேச அளவில் 109 கோல்களை அடித்து சாதனை படைத்திருந்தார். அலி தாய் சாதனையை ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று நம்பப்படுகிறது.
யூஃபா நேஷன்ஸ் கோப்பை தொடரில் நேற்று ஸ்டாக்ஹோமில் நடந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை ஸ்வீடன் எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ 45 -வது நிமிடத்தில் ப்ரீகிக் கோல் அடித்தார். சர்வதேச கால்பந்து தொடரில் ரொனால்டோ அடித்த 100- வது கோல் இதுவாகும். தொடர்ந்து ,பிற்பாதியில் 72-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்காக இரண்டாவது கோலையும் ரொனால்டோவே அடித்தார். ஸ்வீடன் அணியால் இறுதி வரை கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச ஆட்டங்களில் 100 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார். முன்னதாக . ஈரான் வீரர் அரி தாய் தன் நாட்டுக்காக 109 கோல்களை அடித்துள்ளார். தற்போது, 35 வயதான ரொனால்டோ 101 கோல்களை எட்டியுள்ளதால் அடுத்த உலகக் கோப்பை தொடருக்குள் அலி தாயின் சாதனையை முறியடித்து விடுவார் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2003 - ஆம் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச ஆட்டங்களில் களமிறங்கிய ரொனால்டோ, 2004 ஆம் ஆண்டு யூரோ தொடரில் கிரீஸ் அணிக்கு எதிராக தன் முதல் சர்வதேச கோலை அடித்தார் எண்ணிக்கையை தொடங்கினார். இவரின் இந்த 101 கோல்களில் 9 ஹாட்ரிக் கோல்களும் அடங்கியுள்ளன.