ஐ.பி.எல் தொடரில் டைட்டில் ஸ்பான்ஷராக இருந்த சீன நிறுவனம் விவோ விலகியுள்ளளதை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் ஸ்பான்ஷராக விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.
ஜியோ, அமேஸான் , டாடா குழுமம் , ட்ரீம் லெவன் , அதானி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் ஆகியவை ஐ.பி.எஸ் டைட்டிள் ஸ்பான்ஷருக்கு விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஷராக விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே. திஜராவாலா கூறுகையில், '' பதஞ்சலி நிறுவனத்தை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். விரைவில் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஷராக விண்ணப்பிப்போம் '' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு சீனாவின் விவோ நிறுவனம் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்ஷராக பி.சி.சி.ஐ- யுடன் ஒப்பதம் செய்தது. ஆண்டுக்கு ரூ. 440 கோடி மதிப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2023- ஆம் ஆண்டு வரை விவோவுக்கு பி.சி.சி.ஐ யுடன் ஒப்பந்தம் உள்ளது.
ஆனால்,லடாக்கில் கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், ஐ.பி.எல் தொடருக்கு சீன நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஷராக இருக்க கூடாது என்று சர்ச்சை எழுந்தது. இதனால், இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்ஷராக இருந்த விவோ விலகியது.