பிரிட்டன் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில், நடப்பு சாம்பியனான ஹாமில்டன் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். பார்முலா ஒன் கார் பந்தயங்கள் நடப்பு சீசனில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படுகின்றன.
இதில் நான்காவது போட்டி இங்கிலாந்தில் சில்வர்ஸ்டோன் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. தொடக்க சுற்றுகளிலேயே 3 வீரர்களின் கார்கள் பழுதாகி தடுப்பு சுவர்களில் மோதி நின்றன.
பிரிட்டன் வீரர் ஹாமில்டன், ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்ஸ் ஆகிய இருவரும், கார் டயர்கள் பஞ்சரானதையும் பொருட்படுத்தாமல் ஓட்டிச் சென்றனர்.
விறுவிறுப்பான இப்போட்டியில் 306 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 28 நிமிடம் ஒரு வினாடியில் கடந்த மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பிரிட்டன் கிராண்ட் பிரி பட்டத்தை அவர் வெல்வது இது 7வது முறையாகும். பெல்ஜியத்தைச் சேர்ந்த வெர்ஸ்ட்டாப்பன் இரண்டாம் இடத்தையும், மொனாக்கோவைச் சேர்ந்த லெக்லர்க் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டி தொடங்குமுன், நிறவெறிக்கு எதிராக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வண்ணம் வீரர்கள் இணைந்து நின்றனர். கொரோனா காலத்தில் போராடும் முன்கள வீரர்களுக்கு கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.