கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் தொடங்க இருந்த 13- வது ஐ.பி.எல் தொடர் ரத்து செய்யப்பட்டது . அதே போல, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி- 20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதிலும் சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை, உலகக் கோப்பை டி- 20 தொடர் ரத்து செய்யப்பட்டால், இதே காலக்கட்டத்தில் ஐ.பி.எல் தொடரை வேறு ஏதாவது நாட்டில் நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசித்து வருகிறது.
ஐ.பி.எல் தொடரை தங்கள் நாட்டில் நடத்த அமீரக கிரிக்கெட் போர்டு விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமீரக கிரிக்கெட் போர்டின் செயலாளர் முபாஷீர் உஸ்மானி கூறுகையில், '' ஏற்கெனவே அமீரகத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்தியுள்ளோம். பல நாட்டு அணிகளும் எங்கள் மண்ணில் பொது இடமாக தேர்வு செய்து கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளன. எனவே, எங்கள் நாட்டில் ஐ.பி.எல் தொடரை நடத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் . அதற்கான உள்ளகட்டமைப்புகள் எங்கள் நாட்டில் உள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014- ம் ஆண்டு பொதுதேர்தல் காரணமாக அமீரகத்தில் ஐ.பி.எல் தொடரின் முதல் கட்ட போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டில் ஐ.பி.எல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. எனினும், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி- 20 உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டால் மட்டுமே 13- வது ஐ.பி.எல் தொடர் நடைபெற வாய்ப்புள்ளது. வரும் ஜூன் 10- ந் தேதி உலகக் கோப்பை டி- 20 தொடர் குறித்து ஐ.சி.சி வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கிறது.