கொரோனா தாக்கத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் வரும் ஜூலை 24ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆனால் உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.
ஜப்பானில் ஆயிரத்து 101 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதோடு, இதுவரை அங்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், முதல் முறையாக, ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படாது என்றும், அதேசமயம், முழுமையான வடிவில் நடத்தப்பட வேண்டும் என்றால் ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஷின்சோ அபே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து திட்டமிட்டு வருவதாக, அவசரக் கூட்டத்திற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் தெரிவித்துள்ளது.