இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என, இரு அணிகளை சேர்ந்த முன்னாள் அதிரடி வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெறும் விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டிகள், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்க்கும்.
கடந்த 2012-13-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு தொடர் ஏதும் நடக்கவில்லை.
இதனிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி, இந்தியா-பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், அது பிரபலமான ஆஷஸ் தொடரை விட பெரிதாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழலை பார்த்தால் இது நடக்கும் என்று தோன்றவில்லை.
மக்களும் இரு நாடுகளிக்கிடையே கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். மக்களின் விருப்பங்களுக்காக இரு நாடுகளும் ஒரு சில விஷயங்களை பின்னால் வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக நம் நாடுகள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.
அதே போல நான் இந்தியாவில் செலவிட்ட நாட்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை. நான் இந்தியர்களிடம் இருந்து நிறைய அன்பை பெற்றுள்ளேன். அதே போல இந்திய வீரர்களுக்கும் எங்கள் நாட்டினரிடமிருந்து ஏராளமான அன்பு கிடைக்கிறது. இந்த தொடர்பும், உறவும் நீடிக்க வேண்டுமே தவிர துண்டிக்கப்பட கூடாது என கூறியுள்ளார் அஃப்ரிடி.
அஃப்ரிடியின் இந்த கருத்தை ஆமோதித்துள்ள இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போட்டிகள் அதிகமாக நடந்தால் அது கிரிக்கெட் விளையாட்டிற்கு சிறப்பானதாக இருக்கும். கடந்த 2004, 2006 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் நான் பங்கேற்று விளையாடியது இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது.
இது எனக்கு போதுமானதாக இல்லை. நாங்கள் விளையாட்டின் மீதுள்ள காதல் காரணமாக கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆனால் எந்த நாட்டுக்கு எதிராக நாங்கள் விளையாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முடிவு எங்கள் கைகளில் இல்லை என்று யுவராஜ் கூறியுள்ளார்.