ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது.
24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் 20 சென்டிமீட்டரும் சிட்னியில் 39 சென்டி மீட்டர் மழையும் பதிவாகின. இதனால் தாழ்வான இடங்களை வெள்ளம் சூழ்ந்ததுடன் வாகனங்கள் நீரில் மூழ்கின. மழையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதனிடையே கடந்த வெள்ளி முதல் பெய்யும் பெருமழையால் 30 இடங்களில் பல மாதங்களாக எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ கட்டுக்குள் வந்து விட்டதாக நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதிலும் கடந்த 74 நாட்களில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பை சாம்பலாக்கிய கரோவான் (Currowan) தீ யை அணைக்க இந்த மழை பெரும் உதவிகரமாக இருந்துள்ளது.