ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று ஏமாற்றிய இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்த வங்கிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சில முக்கிய நீதிமன்றங்கள் சிவில் வழக்குகள் தொடர்பாக பிறப்பிக்கும் உத்தரவுகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வகை செய்யும் அறிவிக்கையை கடந்த மாதம் 17-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது.
இதன்படி தொடர்புடையவர்களுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்ற உத்தரவு தங்களிடம் இருந்தால், அந்த நாட்டு வங்கிகளும் இந்திய உள்ளூர் வங்கிகளைப் போலவே இந்தியாவில் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகளில், தங்களது துணை நிறுவனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்ற இந்திய நிறுவனங்கள் அங்கு தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாகவும் கடன் பெற்ற இந்தியர்கள் பலர் அவற்றைச் செலுத்தாமல் இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டதாகவும் அந்நாட்டு வங்கிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்திய அரசின் அறிவிக்கையை அடுத்து தொடர்புடையவர்கள் மீது ஐக்கிய அரபு அமீரக வங்கிகள் அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை பெற்றபின் இந்தியாவில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய சட்ட நிறுவனங்களின் உதவிகளையும் அந்த வங்கிகள் நாடியுள்ளன.