உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது.
பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான்.
இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான்.
திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட முயன்றார். இதனை அடுத்து அவரது கழுத்தை நெறித்து, வாயை மூடி பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான் அந்த கொள்ளையன்.
கொள்ளையனின் காம வெறியில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என மின்னல் வேகத்தில் யோசித்த அந்த பெண், பயங்கரமாக இருமியுள்ளார். மேலும் தான் வூகான் நகரில் இருந்து வந்துள்ளதாகவும், கொரோனோவால் பாதிக்கப்பட்ட தம்மை தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறி கொண்டே இன்னும் பலமாக இருமியுள்ளார்.
கொரோனோ என்ற வார்த்தையை கேட்டதுமே கொள்ளையன், பெண்ணை பலாத்காரம் செய்யும் முயற்சியில் இருந்து பின்வாங்கி தலைதெறிக்க தப்பித்து ஓடியுள்ளான். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அந்த பெண். கொரோனாவிடமிருந்து தப்பிக்க மக்கள் அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இறுதியாக கொள்ளயடிக்க வந்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்ட 25 வயதுடைய அந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.