ஹாங்காங் சென்று திரும்பிய ஜப்பான் சொகுசுக் கப்பலில் மேலும் 41 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டைமண்ட் பிரின்சஸ் என்ற அந்த கப்பலில் 80 வயது முதியவருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பிறருக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் கப்பல் நடுக்கடலில் தனிமைபடுத்தப்பட்டது.
அதிலுள்ள 3,700 பயணிகளும் 2 வாரங்களுக்கு கப்பலிலேயே தங்கியிருக்க ஜப்பான் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. தொடர்ந்து 20 பயணிகளுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 171 பேருக்கான சோதனை முடிவில் மேலும் 41 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கப்பலில் கொரானா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.