கொரானா வைரஸ் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா அச்சத்தை உருவாக்கி பரப்புவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியுவுடன், அங்கிருந்து முதன் முதலில் இருந்த தங்கள் நாட்டவரை மீட்ட நாடு அமெரிக்கா. சீனாவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண அறிவுரையையும் அமெரிக்காதான் முதன் முதலில் வெளியிட்டது.
இதேபோல, அண்மையில் சீனாவுக்கு சென்று வந்த வெளிநாட்டவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது என அமெரிக்கா நேற்று தடை விதித்தது.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்-யிங், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மீறி, பயணம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அதீத கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிப்பதாக கூறினார். இதுவரை அமெரிக்க அரசு சீனாவுக்கு குறிப்பிடத்தக்க உதவி எதையும் வழங்கவில்லை என்றும் ஹுவா சுன்-யிங் குற்றம்சாட்டினார்.