சீனாவிலிருந்து கிளம்பி மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை கூட பதம் பார்க்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அட என்ன.. உயிரை கொல்லும் வைரஸ் பா அது.. போன்கள், கம்ப்யூட்டர்களை எப்படி பாதிக்கும் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதற்கான பதிலை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
உயிர்கொல்லி:
கொரோனா வைரஸ்.. இந்த வார்த்தையை இன்று உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது மேற்கண்ட வைரஸ். கொரோனா இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை குடித்துள்ளது.
அறிவுறுத்தல்கள்:
வேக வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் பல்வேறு நாட்டின் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த உயிர்கொல்லி பற்றியும், வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதிகரிக்கும் ஷேரிங்:
உலக மக்களும் கொரோனா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வுக்காகவும், அதன் அறிகுறிகளை பற்றியும் பல்வேறு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவை அடங்கிய தகவல்கள் சமூகவலைத்தளங்களிலும் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
நம்பகமற்ற தகவல்கள்:
அதேவேளையில் கொரோனா தடுப்பு மற்றும் அறிகுறிகள் தொடர்பான பல தவறான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் பரவி வருகின்றன. எனவே எல்லா தகவல்களையும் பரப்பாமல் சரியான தகவல்களை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.
வினையாகும் மக்களின் ஆர்வம்:
எல்லாம் சரி கொரோனா தொடர்பான தகவல்களுக்கும், நீங்கள் மேற்சொன்ன போன்கள் பாதிக்கும் தகவலுக்கும் என்ன சம்பந்தம் என்கீறீர்களா.? சம்பந்தம் இருக்கிறது. உலக மக்களின் கொரோனா ஆர்வத்தை பயன்படுத்தி புகுந்து விளையாடுகிறார்களாம் சைபர் கிரிமினல்கள்.
வலையில் விழுவோம்:
கொரோனா வைரஸ் பற்றிய PDF, MP4 மற்றும் DOCX ஃபைல்கள் போர்வையில் தான் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர் சைபர் கிரிமினல்களான ஹேக்கர்கள். ஆம் நம்முடைய நன்மைக்கு தான் கொரோனா பற்றிய தகவலை யாரோ நமக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற எண்ணத்தில், போன்களில் இருந்தோ கணினியில் இருந்தோ கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்தால், ஹேக்கர்களின் வலையில் விழும் வாய்ப்பு உள்ளதை நினைவு கொள்ள வேண்டும்.
என்ன பெயரில் வரும்..?
சைபர் கிரிமினல்கள் அனுப்பும் ஃபைல்கள், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வீடியோ வழிமுறைகள் , அச்சுறுத்தல் குறித்த அப்டேட்கள், கொரோனாவை கண்டறிவதற்கான நடைமுறைகள் என்பன போன்ற தலைப்பில் அனுப்பப்படுவதாக கூறியுள்ளது பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான Kaspersky.
பாதிப்பு என்ன?
சைபர் கிரிமினல்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்க, மாற்றியமைக்க அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் கணினி அல்லது கணினி நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் குறுக்கிடும் என Kaspersky நிறுவனம் எச்சரித்துள்ளது.
இத உன்னிப்பா பாருங்க:
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் Extension-களை கவனமாக பாருங்கள். டாக்குமெண்ட்கள் மற்றும் வீடியோ ஃபைல்கள் .exe அல்லது .lnk என்று குறிப்பிடப்பட்டிருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுங்கள் என Kaspersky கூறியுள்ளது.