கொரோனா வைரசுக்கு சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆயிரம் பேரும், சீனாவுக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 213 பேரில் பெரும்பாலானவர்கள் வூகான் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட இடங்களிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் 9 பேருக்கும், கம்போடியாவில் ஒருவருக்கும், ஹாங்காங்கில் 12 பேருக்கும் இந்தியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் 14 பேரை கொரானா வைரஸ் பாதித்துள்ளது. வூகானில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கும், சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சீனாவின் சுயாட்சி பிரதேசமான மக்காவ் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சீனர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவானில் 8 பேர், நேபாளத்தில் ஒருவர், பிலிப்பைன்சில் ஒருவர், இலங்கையில் ஒருவர், சிங்கப்பூரில் 13 பேர், தாய்லாந்தில் 14 பேர், வியட்நாமில் 5 பேர், கனடாவில் 2 பேர், அமெரிக்காவில் 6 பேர், ஃபின்லாந்தில் ஒருவர், ஃபிரான்சில் 6 பேர், ஜெர்மனியில் 5 பேர், இத்தாலியில் 2 பேர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அண்மையில் வூகானில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.