இந்தியாவின் குடியுரிமை சட்ட திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தை விமர்சிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 6 தனித்தனி தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அவை கூட்டுத் தீர்மானமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கூட்டத்தில், இந்த கூட்டு தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், அது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முழுமையாக விவரங்களை தெரிந்துகொள்ளும் முன்னரே வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என ஐரோப்பிய மக்கள் கட்சி எம்.பி. மைக்கேல் காலர் திருத்தம் கொண்டுவந்தார். இதையடுத்து மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பதற்கு ஆதரவாக 271 வாக்குகள் கிடைத்தன.
இதனிடையே, 6 தீர்மானங்கள் கொண்டுவரப்படுவதற்கு, ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.யும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவருமான ஷஃபக் முகமதே காரணம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதமோ அல்லது வாக்கெடுப்போ இந்தியாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றாலும், இருதரப்பு உறவுகளில் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.