பெரும்பாலும் ஆன்லைனில் உலா வரும் சேலஞ்சுகள் பலவும் தலையில் அடித்து கொள்ளும் ரகங்களாகவே இருக்கும். தற்போது அப்படிப்பட்ட சவால் ஒன்று தான் டிக்டாக்கில் பிரபலமாகி, வைரலாகி வருகிறது.
தொழிநுட்பங்கள் வளர வளர அறிவு ஒரு பக்கம் வளர்ந்தாலும், அதை வைத்து சிலர் செய்யும் வீணான அபத்த செயல்களால் ஆபத்தும் அதிகமாகி கொண்டே போகிறது. கிகி சேலஞ்ச், கரப்பான்பூச்சி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , மோமோ சேலஞ்ச், ப்ளூ வேல் சேலஞ்ச், டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச் என வரிசைகட்டிய பல வினோத சவால்கள் பட்டியலில், தற்போது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் #cerealchallenge வைரலாகி வருகிறது.
இந்த சவாலை தமிழில் தானியசவால் என கூறலாம். காலை உணவாக பாலில் கலந்து சாப்பிடும் தானியமான கார்ன் பிளேக்ஸை மற்றும் வேறு வகையான தானியங்களை வைத்து தான் இந்த அபாயகரமான சவால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த சவால் படி ஒருவரை உட்கார வைத்தோ அல்லது படுக்க வைத்தோ அவரது வாயை திறந்து பால் அல்லது பழச்சாற்றை ஊற்றி , பின்னர் தானியங்களை கொட்ட வேண்டும். பின்னர் அந்த தானியங்களை மற்றொருவர் அவர் வாயிலிருந்து ஸ்பூனால் எடுத்து சாப்பிட வேண்டும். அதற்கேற்றவாறு வாயை மூடாமல் திறந்தபடியே படுத்திருக்க வேண்டும் இன்னொருவர்.
சாதாரணமாக நாம் சாப்பிடும்போதே மிக கவனமாக சாப்பிட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.சமீபத்தில் கூட சென்னையில் ஆசையாக போண்டா வாங்கி தின்ற பெண் ஒருவர், மூச்சு குழாயில் போண்டா சென்று அடைத்து கொண்டதால் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்தது.
அதே போல பேசி கொண்டே சாப்பிட கூடாது என்பதும் மருத்துவர்களின் முக்கிய அறிவுரை. ஆனால் இந்த #CerealChallenge மூலம், விபரீத முயற்சியை மேற்கொள்கின்றனர் பலர். இந்த சவாலை ஏற்று கொண்டுள்ளதில், பிரபலமான You tuber பிரெட்மேன் ராக்கும் ஒருவராவார்.
சவால் என்ற பெயரில் மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை வீடியோவாக வெளியிடுவதற்கு கடிவாளம் போட டிக்டாக் போன்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.