மேற்கத்திய நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட 150 கண்டெய்னர் குப்பைகள் மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மேலை நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்ததைத் தொடர்ந்து அந்தக் கழிவுகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டன. இதனைக் கண்ட அந்நாட்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இயோ பீ இன், மேற்கண்ட கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.
இதையடுத்து 150 கன்டெய்னர்களில் வந்த குப்பைகள் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மலேசிய துறைமுகங்களில் இன்னும் 110 கன்டெய்னர் குப்பைகள் உள்ளன. அவை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை அளிக்க விரும்புவதாகவும் அமைச்சர் இயோ பீ இன் தெரிவித்தார்.