பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ஹைனஸ் என்ற கெளரவத்துடன் ஹாரி-மேகன் தம்பதி, இனி அழைக்கப்படமாட்டார்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில், சூரியன் மறையாத தேசம் என வர்ணிக்கப்பட்டது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்... ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச பாரம்பரியத்தை கொண்டது.. காலனிய ஆதிக்கத்தில், பல நாடுகளை தனது பிடிக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சரிவை சந்திக்கத் தொடங்கிய காலங்களுக்கு முன்பாகவே, இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள் திடீர் திடீரென எடுக்கும் அசாதாரண முடிவுகளால், சங்கடங்களையும், சர்ச்சைகளையும் பக்கிங்ஹாம் அரண்மனை சந்திக்கத் தவறவில்லை...
1936ஆம் ஆண்டு, 2 முறை விவாகரத்தான அமெரிக்க பெண்ண மணக்க விரும்பிய மன்னர் 8ஆம் எட்வர்டு தனது பதவியை உதறிய நாள் முதலே, அரச குடும்ப சர்ச்சைகள் தொடர்கின்றன. 1952ஆம் ஆண்டு, இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் செல்ல தங்கையாக வலம் வந்த இளவரசி மார்க்கிரேட், பிரிட்டன் விமானப்படையின் முன்னாள் அதிகாரியை மணக்க விரும்பியபோது, அது, பிரிட்டிஷ் அரசக் குடும்பத்துக்குள் பெரும் புயலை உருவாக்கியது.
1992 பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-டயானா பிரிவு, அதே ஆண்டில், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசி ஆனி ஆகியோர் அடுத்தடுத்து இல்லற துணைகளை பிரிந்ததும் அரச குடும்பத்தை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது. 1997ல் டயானா விபத்தில் சிக்கியபோது, பக்கிங்ஹாம் அரண்மனை பெரும் சர்ச்சையை எதிர்கொண்டு ஒருவழியாக மீண்டது. டயானா மறைவுக்கு பின்னர் 20 ஆண்டுகளாக சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், அண்மையில், அரச பதவிகளோ, அதன் சொத்துகளோ என எதுவும் வேண்டாம் என உதறித் தள்ளி, பக்கிங்ஹாம் அரண்மனையை மீண்டும் தெறிக்கவிட்டார், இளவரசர் ஹாரி...
மிகவும் கெளரவமிக்க பதவியை கைவிட ஹாரி-மேகன் தம்பதி எடுத்த முடிவு, உலகளவில் விவாதத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியபோது, ராணி இரண்டாம் எலிசபெத்தால், அமைதியான தீர்வை எட்ட முடியவில்லை. அரண்மனையை விட்டு வெளியேறும் முடிவில் இளவரசர் ஹாரி உறுதியாக இருந்ததால், அதற்கு, பாட்டிக்கே உரித்தான ஆற்றாமையுடன் ராணி இரண்டாம் எலிசபெத் அனுமதி அளித்தார். பட்டங்கள் பறிபோனாலும், எப்போதும் போல் பந்தத்தை தொடரலாம் என்றும், அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தார்.
இதுகுறித்து பிரிட்டன் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக, அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. His அல்லது Her - Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு சில முக்கிய உறுப்பினர்கள் அழைக்கப்படுவர். இனி ஹாரி மற்றும் மேகன் ஆகியோர், இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக இனி பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃபிராக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2 புள்ளி 4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹாரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. லண்டனின் உள்ள ஃபிராக்மோர் மாளிகையை ஹாரி தம்பதி தங்கள் வசத்தில் வைத்திருப்பார்கள் என்றும், ஆனால் அதற்கான வாடகையை அவர்கள் செலுத்துவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ஹாரி தம்பதி கனடாவில் வசிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவர்களின் பாதுகாப்பிற்கான செலவுகளை யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே நேரத்தில் குடியுரிமை இல்லாத இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் 6 மாதங்கள் மட்டுமே கனடா நாட்டில் வசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹாரி தம்பதி விரைவில் கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறும், ஹாரி-மேகன் தம்பதிக்கும், அவர்களின் குழந்தைக்கு, பிரிட்டன் மக்களின் வாழ்த்துக்கள் என்றென்றைக்கும் இருக்கும் என, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்தியிருக்கிறார்.