கணவனை சொட்டு மருந்து மூலம் கொன்ற குற்றத்திற்காக, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த பெண்ணுக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சார்லட் நகரில் வசித்து வந்த (Charlotte) முன்னாள் செவிலியரான லானா சூ கிளேட்டன் என்பவர் மீது, கோடீஸ்வரரான அவரது கணவர் ஸ்டீவன் கிளேட்டனை கொலை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த கொலை வெளிச்சத்திற்கு வந்தது. கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதால் அவரைப் பழிவாங்குவதற்காக, திரைப்படத்தை பார்த்து கண்ணில் விடும் சொட்டு மருந்தை குடிநீரில் கலந்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.
அதனால் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றே தான் நினைத்ததாகவும், உயிரிழப்பார் என்று கருதவில்லை என்றும் லானா தெரிவித்தார். எனினும் கொலை குற்றத்திற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.