துபாயில் பெய்த திடீர் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
துபாயில் கடந்த 2 நாள்களாக பரவலாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 150 மில்லி மீட்டர் அளவுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் சாலைகளிலும், தொழிற்சாலைகள், வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் சுமார் 3 முதல் 4 அடி உயரத்துக்கு நீர் தேங்கி நின்றது. இதனால் ஆலைகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின.
ஷார்ஜாவை நோக்கி செல்லும் சேக் முகமது பின் ஜயீத் சாலையில் வெள்ள நீர் அகற்றப்பட்டதால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. பாலைவனத்தில் பெய்த மழையால், தார்சாலைகள் கீழிருக்கும் மணல் பரப்பில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் தார் சாலைகள் விரிசல் ஏற்பட்டு உடைந்து சேதமடைந்தன. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையும் பாதிக்கப்பட்டது.