ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 ராணுவ வீரர்களும் 63 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
தலைநகர் நியாமேயின் மேற்குப் பகுதியில் மாலி நாட்டு எல்லை ஒட்டி ராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து நைஜரின் விமானப்படை மற்றும் அண்டை நாடான மாலியிலிருந்து வந்த படையினர் தீவிரவாதிகள் மீது எதிர்தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் நைஜர் ராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் தரப்பில் 63 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு காரணமாக இருக்கலாம் என நைஜீரிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இதே பகுதியில் சைனாகார்டர் என்ற இடத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 71 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.