ஈரான் மற்றும் அமெரிக்கா வன்முறையை விடுத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரான் ராணுவ தளபதி குவாஸிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மேலும், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டுமெனவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகள் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.