ஈரான் மீது அமெரிக்கா போர்த்தொடுப்பதைத் தவிர்க்கும் வகையில், அதிபர் டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு 224 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர்.
போருக்கான சூழலில் இருந்து ஈரான் பின்வாங்கியதை அடுத்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணமில்லை என்று டிரம்ப் அறிவித்தார். ஆனால் இப்பிரச்சினையை அமெரிக்க காங்கிரஸ் சபை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
முன்னாள் அதிபர் நிக்சன் ஆட்சிக் காலகட்டத்தில் அறிமுகமான இந்த சட்டம் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் மேலும் வலுப்பெற்றது. தீவிரவாதிகளை வேட்டையாட வெளிநாடுகளுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது தொடர்பாக, அதிபருக்கு சிறப்பு அதிகாரத்தை இச்சட்டம் வழங்கியது.
அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் அல்லது தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால் அமெரிக்கா தனது படைபலத்தை பயன்படுத்தலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. வெளிநாட்டுக்குப் படைகளை அதிபர் அனுப்புவதற்கு அமெரிக்க காங்கிரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், வெளிநாட்டில் அமெரிக்கப் படைகள் 60 நாட்களுக்கு மட்டுமே இயங்க வேண்டும் என்றும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களுக்குப் பிறகு படைகளைத் திரும்பப்பெற 30 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கவும் அமெரிக்க சட்டம் வகை செய்கிறது. ஈரானுடன் அமெரிக்காவின் போர்ப் பதற்றம் தற்காலிகமாக தணிந்திருக்கும் நிலையில், வேறு ஒரு நாடு மீது போர்த்தொடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பதற்கான யுத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கியிருக்கிறது.