மொராக்கோவிலிருந்து சிறுவன் ஒருவனை, ஸ்பெயின் நாட்டின் எல்லைக்கு அழைத்து செல்ல முயன்ற ஒரு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஆப்பிரிக்காவின் வடமேற்கில் உள்ள தன்னாட்சி பெற்ற ஸ்பானிஷ் நகரமான மெலிலாவிற்கு, 10 வயது பாலஸ்தீனிய சிறுவன் ஒருவனை, மொராக்கோ நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி அழைத்து செல்ல முயன்றனர்.
அதற்காக அவர்கள் பழம் மற்றும் காய்கறிகள் அடங்கிய ட்ராலி ஒன்றை பயன்படுத்தினர். ட்ராலி ஒன்றில் அந்த சிறுவனை மடக்கி அமர வைத்து அவன் மீது பழங்கள் மற்றும் காய்கறிகளை நிரப்பி விட்டனர். பின்னர் அவர்கள் மெலிலாவில் உள்ள பெனி-என்சார் எல்லைக்கோட்டருகே சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் தள்ளி கொண்டு சென்ற ட்ராலி இயல்பான எடையில் இல்லாததை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்தனர். இதனை அடுத்து ட்ராலியை சோதிட்ட அதிகாரிகள், அதனுள் சிறுவன் மறைந்திருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்தது அந்த மொராக்கோ தம்பதியை அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் சிறுவன் அருகிலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வரும் அவனது தாயிடமே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
மெலிலா என்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மத்தியில் ஒரு பிரபலமான குறுக்குவழியாகும். மேலும் இது ஐரோப்பிய ஒன்றியம் ஆப்பிரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளும் இரண்டு நில எல்லைகளில் ஒன்றாகும். மெலிலா மீது ஸ்பானிஷ் செலுத்தும் ஆதிக்கத்தை மொராக்கோ அங்கீகரிக்கவில்லை.
2005-ம் ஆண்டில் மெலிலாவைச் சுற்றி 11 கி.மீ நீளமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்ட புதிய எல்லை வேலி கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.