வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் சஹாபுதீன் மற்றும் மாணவர் அமைப்பினர் இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இடைக்கால அரசில் இடம்பெறும் மற்ற உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் அமைப்பினரின் போராட்டத்தினால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது.
பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், 1983-ல் கிராமீன் வங்கியைத் தொடங்கி, ஏழைகளுக்குக் குறுங்கடன்களை வழங்கினார். வறுமை ஒழிப்புக்கான மிகச் சிறந்த திட்டம் என இத் திட்டம் உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ஏழை மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பாடுபட்டதற்காக, முகம்மது யூனுஸுக்கு 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரமன் மகசேசே விருது, உலக உணவுப் பரிசு, காந்தி அமைதிப் பரிசு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.