ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு, நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன், டிரம்ப் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டபோது, தன்னோடு நெருக்கமாக இருந்தது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க ஸ்டார்மி டேனியல்ஸுக்கு தேர்தல் நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது 34 வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்பை குற்றவாளி என அறிவித்தது. ஜூலை 11-ம் தேதி அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்றபோதும் அமெரிக்க அதிபர் பதவி வகித்த ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதே சமயம் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட எந்த ஒரு தடையும் இல்லை என கூறப்படுகிறது.