விண்வெளியில் சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து லேசர் மூலம் தரவுகளை அனுப்பி நாஸா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அத்திட்டத்தின் இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
சூரிய குடும்பத்தில் அரியதாக, உலோகங்கள் அடங்கிய நுண்கோள் ஒன்று செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையே இருப்பதைக் கண்டுபிடித்த நாசா, பூமிக்கும் சூரியனுக்கு இடையிலான தூரத்தை விட ஒன்றரை மடங்கு அதிக தொலைவில் உள்ள அந்த நுண்கோளை ஆராய 2023 அக்டோபரில் ஸைக் என்ற விண்கலத்தை அனுப்பியது.
நுண்கோளை ஆய்வு செய்து, தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வழக்கமான அலைவரிசை மூலம் ஸைக் விண்கலம் தான் சேகரித்த தரவுகளை அனுப்பியது. அதே தரவுகளை தனது ஈர்ப்பில்லாவெளி ஒளிவழித் தொடர்பு கருவி மூலம் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் ஸைக் விண்கலம் 10 நிமிட நேரம் அனுப்பியதாக மீரா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாரம்பரிய முறைகளை விட லேசர் தொலை தொடர்பை விண்வெளியில் திறம்பட செயல்படுத்த முடியும் என்பது தெளிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.