அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பேக் செய்தபோது பெட்டிக்குள் தங்கள் செல்ல பூனை இருந்ததை அறியாமல் அனுப்பி விட்டனர்.
அமேசானின் பல மையங்களுக்கு 6 நாட்களாக பயணித்து கலிஃபோர்னியா சென்ற அந்த பார்சலை ஊழியர்கள் பிரித்த போது உள்ளே பூனை இருந்ததைப் பார்த்தனர்.
அட்டைப் பெட்டியின் ஒரு பகுதி கிழிந்து இடைவெளி இருந்ததால் ஆக்சிஜன் கிடைத்த நிலையில், உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் 6 நாட்களாக உயிருடன் இருந்த அந்த பூனைக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் அளிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் முதலுதவி அளிக்கப்பட்டது.
தகவல் தெரிந்ததும் விமானத்தில் பறந்து வந்த உரிமையாளர்கள் பூனையை பெற்றுச் சென்றனர்.