ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில், 6 ஆயிரம் பேர் அமரும் வகையிலான சிட்டி ஹாலில், உட்புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 70 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 145 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவச் சீருடை அணிந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசிக்கொண்டே நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அந்த பிரம்மாண்ட அரங்கில் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினர்.
தரையில் படுத்து தப்பிக்க நினைத்த மக்களையும் தீவிரவாதிகள் விட்டுவைக்கவில்லை. தீவிரவாத கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 145 பேர் படுகாயம் அடைந்தனர்.
குண்டுகளை வீசியபோது, அந்த பிரம்மாண்ட அரங்கத்தின் ஒருபகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கி, பின்னர் நாலாபுறமும் பரவியது. இந்த தீ விபத்தில் சிட்டி ஹாலின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தீவிரவாத தாக்குதலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
மாஸ்கோவில் காணக் கிடைத்த காட்சிகள் மிகவும் கொடூரமானவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்போம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதாக முதலில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடியோடு மறுத்த உக்ரைன், மாஸ்கோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், மாஸ்கோ தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் அறிவித்துள்ளது.