பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முன்னாள் பிரதமர்களான இம்ரான்கான், நவாஸ் ஷெரீப் ஆகிய இருவரும் தங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இம்ரான்கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனிடையே, லாகூரில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு வந்த நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியுடன் இணைந்து ஆட்சியை உருவாக்க நவாஸ் ஷெரீப் முயன்று வருகிறார்.
பெனாசிர் பூட்டோவின் கணவரும் முன்னாள் அதிபருமான சர்தாரி, பிலாவல் பூட்டோ ஆகியோர் லாகூர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.