ஜெருசலம் பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலால்தான் காஸா பகுதியில் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
துபாய் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்தாலும், காஸா பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்கும் இஸ்ரேலும் பங்கு முக்கியமானது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படியும் இஸ்ரேலுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்காக, இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவியும் ஆதரவும் அளிக்கும் என்றும், காஸா பகுதியில் அமைதி நிலவவும், ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழு நாள் போர் இடைநிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பே ஹமாஸ் போராளிகள் ஜெருசலத்தில் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், அமெரிக்கர்கள் உள்பட பலர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.