இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து 2 வாரங்கள் கடந்துள்ளன. எனினும், இஸ்ரேல் காஸாவுக்குள் இன்னும் நுழையாமல் இருப்பதற்கு முக்கியமாக 5 காரணங்கள் இருப்பதாக கூறுகின்றனர், ராணுவ வல்லுநர்கள்.
மெர்காவா டாங்கிகள்.. பீரங்கிகள்.. நவீன ஆயுதங்களுடன் காஸாவுக்குள் நுழைய தயார் நிலையில் உள்ளனர், இஸ்ரேல் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர். காஸாவுக்குள் நுழையாமல் இருக்க முதல் காரணம், அமெரிக்கா. காஸா மீது தாக்குதல் நடத்திவிட்டு ஆக்கிரமிப்பு செய்யாமல் திரும்பி விட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார், இஸ்ரேலுக்கு அவசர பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அடுத்த காரணம், ஈரான். மத்திய கிழக்கில் ஆயுதக் குழுக்கள் பலவற்றுக்கு ஈரான் நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கி, பயிற்சியும் தந்து வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த குழு, இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அருகில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா.
ஹெஸ்புல்லாவிடம் நீண்ட தூரத்தில் இருந்து துல்லியமாக ஏவக்கூடிய சுமார் 1,50,000 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், ஹிஸ்புல்லா இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க ஆரம்பிக்கும் என்று ராணுவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மூன்றாவது காரணம், மனிதநேய நெருக்கடி. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய உடன் உலக நாடுகளின் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் காஸாவில் மனித நேய நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், தாக்குதலை குறைக்குமாறு பல்வேறு நாடுகளும் கோரி வருகின்றன.
நான்காவது காரணம், ஷின் பெட். வெளிநாடுகளில் உளவுத் தகவல்களை சேகரிப்பது மொசாட்டின் வேலை என்றால், இஸ்ரேலுக்குள்ளும் காஸாவிலும் உளவுப் பணிகளுக்கு பொறுப்பு, ஷின் பெட். அவர்களின் கழுகுப் பார்வையையும் மீறி ஹமாஸ் தாக்குதல் நடத்தி இருப்பது உள்நாட்டு உளவுத்துறையில் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
இதை சரி கட்ட கடந்த 2 வாரங்களில் ஹமாஸ் குழு தலைவர்களின் பெயர்கள், அவர்களின் பதுங்கு குழிகள், பணயக் கைதிகள் உள்ள இடங்களின் விவரங்களை ஷின் பெட் அவசரமாக சேகரித்து தந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தரை வழித் தாக்குதலை துல்லியமாக நடத்த முக்கிய தகவல்கள் சிலவற்றை பெற ஷின் பெட்டுக்கு மேலும் சிறிது காலம் தேவைப்படும் என்றும், இல்லாவிட்டால் வடக்கு காஸாவில் எதிர்பாராத தாக்குதல்களுக்கு ஆளாகி இஸ்ரேல் ராணுவம் சேதத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஐந்தாவது காரணம், ஹமாஸின் சுரங்கங்கள். இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் இருந்து 2 வாரங்களாக தப்பி வரும் ஹமாஸ் போராளிகள் மறைந்திருந்து தாக்குவதற்கும், இஸ்ரேலிய படைகளுக்கான வலைவிரிக்கவும் திட்டமிட்டிருக்கும் என்கின்றனர், ராணுவ நிபுணர்கள். மேலும், ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள் ஆபத்தானவை என்பதால் அவற்றை எதிர்கொள்ளும் யுக்திகளை இஸ்ரேல் ராணுவம் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.