இருளில் மூழ்கியுள்ள காஸா நகரை நோக்கி இரவு நேரத்திலும் இடைவிடாமல் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் கான்கிரீட் குவியலாக மாறியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்க பல்வேறு நாடுகளை ஈரான் அணி திரட்டி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சுட்டுக் கொண்டே செல்பவர்கள், ஹமாஸ் போராளிகள். ரெய்ம் நகரில் கடந்த 7-ஆம் தேதி திறந்தவெளி இசை நிகழ்ச்சி ஒன்றின் போது 260 பேரை துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கிய ஹமாஸ், கழிவறைக்குள் பதுங்கி யாரும் உயிர் தப்பக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அறையாக சுட்டப்படி சென்றனர்.
இத்தகைய கொடூர தாக்குதலை நடத்திய ஹமாஸை எக்காரணம் கொண்டும் விடப் போவதில்லை என்று கூறி இஸ்ரேல் 7-வது நாளாக காஸா நோக்கி குண்டுகளை வீசி வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கியுள்ள காஸாவில் வெடிகுண்டுகள் விழும் வெளிச்சம் மட்டும் அவ்வப்போது அதிர வைக்கும் சத்தத்துடன் மின்னிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேல் விடுத்த 24 மணி நேர கெடு முடிவடைவதற்கு முன் உயிர் பிழைத்து எப்படியாவது தெற்கு காஸாவுக்கு சென்று விட வேண்டும் என்று வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் முண்டியடித்து வெளியேறி வருகின்றனர்.
சுமார் 11 லட்சம் பாலஸ்தீனர்கள் 24 மணி நேரத்துக்குள் வெளியேறுவது சாத்தியமில்லாதது என்று ஐ.நா. கூறியுள்ள போதிலும், உயிர் பயத்தால் வீடுகள், உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு பாலஸ்தீனர்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சரைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினும் டெல் அவிவுக்கு நேரில் வந்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மறுபுறம், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணி திரட்டி வருகிறது.
ஈராக் மற்றும் லெபனானுக்கு நேரில் சென்று அந்நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் உசேன் அமீரப்துல்லாஹியான், காஸாவில் இஸ்ரேல் போர்க் குற்றங்களை தொடர்ந்தால் புதிய அணி ஒன்று திரண்டு தாக்குதல் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார்.
மறுபுறம், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கில் பி.எம்.எஃப், ஏமனின் அனசாரல்லா படைகள் உட்பட மொத்தம் 19 ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய எல்லையில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. ஹமாசுடனான மோதல் பிராந்திய போராக மாறாமல் தவிர்க்கும் வகையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை சற்றே கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
எனினும் ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து வேட்டையாடும் நடவடிக்கைகளை இஸ்ரேல் முடுக்கி விட்டுள்ளது. ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை குடிநீர், மின்சாரம் போன்ற எந்த மனிதாபிமான உதவிகளையும் வழங்க வாய்ப்பே இல்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.