ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்துள்ளதால், இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதன்படி வியாழக்கிழமை இரவு டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
முன்னதாக, இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட இந்தியர்கள் விமானத்திற்குள் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே ஆகிய தேச பக்தி முழக்கங்களை ஒன்றாக எழுப்பினர்.
இதனிடையே, தாயகம் திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரில் 14 பேர் சென்னைக்கும், எஞ்சிய நபர்கள் கோயம்புத்தூருக்கும் பத்திரமான சென்றடைந்தனர்.
ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின்கீழ் இயக்கப்படும் 2ஆவது விமானம் இன்று புறப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.