இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே விடிய விடிய நடந்த சண்டையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான போர் 2ம் நாளாக நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீன நகரமான காசாவில் இஸ்ரேல் இரவு முழுவதும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதல்களில் 198 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் முந்தைய தலைநகரான டெல் அவிவ் நகர் மீது அடுத்தடுத்து 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசினர் ஹமாஸ் போராளிகள். இதில் ஏராளமான கட்டடங்களும், வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
இஸ்ரேலின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி இருப்பதாகவும், இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் தாக்குதலுக்கு வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். காசா பகுதிக்கான மின்சார விநியோகத்தையும், எரிபொருள் மற்றும் பொருட்களின் விநியோகத்தையும் நிறுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதனிடையே காஸா நகரில் பாலஸ்தீன கோபுரம் என்று அழைக்கப்படும் கட்டிடம் தாக்கப்பட்டு தரைமட்டமாகச் சரிந்து விழும் புதிய வீடியோ வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இரவு முழுவதும் ஹமாஸ் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு எதிர்கொண்டு, அவற்றை நடுவானிலேயே அழித்தன.
தொடர் தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் உள்ள பார்சிலாய் மருத்துவ மையம் முற்றிலும் சிதைந்தது. தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கு பணியாற்றியவர்கள் மற்றும் நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதனிடையே இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அந்நாட்டு மக்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் போரைத் தொடங்கியுள்ளதை வரவேற்று ஈரான் தலைநகர் டெஹரானில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் மீதான தாக்குதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு யோம் கிப்பூர் போருக்குப் பின் நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதல் என கூறப்படுகிறது.
இதனிடையே இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 5 ஆயிரத்து 200க்கும் அதிகமான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது. அதுவரை போர் தொடரும் எனவும், அவர்களை விடுவிக்கும் அளவிற்கு இஸ்ரேலிய பணய கைதிகள் தங்களிடம் இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.