இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் திடீரென நடத்தியுள்ள தாக்குதலுக்கு, ஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசல் மோதல் விவகாரமே காரணம் என்று கூறப்படுகிறது.
யூதர்களால் டெம்பிள் மவுண்ட் என்றும், முஸ்லிம்களால் அல்-ஹராம் அல்-ஷரீஃப் என்றும் அழைக்கப்படுவது, கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஸா மசூதி. இஸ்லாத்தில் மூன்றாவது புனிதமான இடம் இதை யூதர்களும் புனிதமான இடமாக கருதுகின்றனர். முஸ்லிம் அல்லாதவர்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள இந்த வளாகம், ஜோர்டன் நாட்டின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பள்ளிவாசலின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நெஃப்தாலி பென்னட், அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாகக் கூறினார். இதற்கு ஜோர்டனும் பாலஸ்தீனமும் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தன.
உலகில் 2வதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் என்று கூறப்படும் இந்த இடத்திற்கு, மெக்கா, மதினாவை அடுத்து அதிக எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வந்து செல்கின்றனர். அல் அக்ஸாவுக்கு செல்லும் இஸ்லாமிய பக்தர்களில் 40 வயதுக்குட்பட்டவர்களை இஸ்ரேல் ஆயுதப்படையினர் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், இஸ்ரேலிய வருடப் பிறப்புக்காக கடந்த 15-ஆம் தேதி அல்-அக்சா மசூதியை இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்தது.
இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதாகக் கூறியே ஆப்பரேஷன் அல்-அக்சா வெள்ளம் என்ற பெயரில் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக ஹமாஸ் குழுவின் துணைத் தலைவர் சலேஹ் அல்-அரோரி கூறியுள்ளார்.
இதற்கு முன் 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாயினர் என்பது வரலாறு. தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மூண்டுள்ள யுத்தத்தை சர்வதேச நாடுகள் கவலையுடன் பார்க்கின்றன