13 மணி நேர விமான பயணத்தில் வயிறு உப்புசத்தால் அவதிப்பட்டுவந்த நாயின் அருகே அமர்ந்து பயணம் செய்த நியூசிலாந்து தம்பதிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை திரும்ப அளித்துள்ளது.
கில் மற்றும் வாரன் என்ற அந்த தம்பதி, பாரீஸிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் ப்ரீமியம் எக்கானமி வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
பயண தினத்தன்று விமான இருக்கையில் அமர்ந்த பின்னரே, தங்களுக்கு அடுத்த இருக்கையில், நாயுடன் ஒருவர் பயணம் செய்வதை அவர்கள் அறிந்தனர்.
கணவர் வாரனின் கால் அருகே அமர்ந்துக்கொண்ட நாய், அதிக சத்தத்துடன் குறட்டைவிட்டதுடன், வயிறு உப்புசத்தால் காற்றை வெளியேற்றியபடி இருந்துள்ளது.
மேலும், நாயின் வாயிலிருந்து வழிந்த எச்சிலால் வாரனின் கால் ஈராமாகியுள்ளது. ஒருகட்டத்தில் நாற்றம் தாங்க முடியாமல், எக்கானமி வகுப்புக்கு சென்று பயணம் செய்ததாக கணவனும், மனைவியும் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கியதும், விமான நிறுவனத்திடம் முறையிட்டதாகவும், எக்கானமி வகுப்பில் பயணம் செய்ததற்காக டிக்கெட் கட்டண வித்தியாச தொகையை திரும்ப பெற்றதாகவும் கூறியுள்ளனர்.