ஆப்பிள் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் நிறுவனர் டெர்ரி கோவ், கிழக்கு ஆசிய தீவு நாடான தைவான் அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தலைநகர் தைபேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்ற நோக்கம் காரணமாகவே அதிபர் பதவிக்கு வர விரும்புவதாக கூறினார்.
தைவான் மீதான சீன தாக்குதலை தடுத்து நிறுத்த தமது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி, தைவானை போர் பதற்றத்தில் வைத்திருப்பதாகவும் டெர்ரி கோவ் குற்றம்சாட்டினார். தைவானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்கமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
தைவானை தமது பகுதி என்று கூறிவரும் சீனா, அந்நாட்டை அச்சுறுத்தும் வகையில் ராணுவ ஒத்திகையை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் தைவானுக்கு துணையாக இருப்போம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.