சீன கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதை உன்னிப்பாக கவனித்துவருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனக்கப்பலில் உளவு பார்க்கும் சாதனங்கள் இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்று கருதப்படுகிறது.
சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியப் பெருங்கடல் பகுதியில் இதர நாடுகளுடன் இந்தியா தனது உறவை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொழும்பு துறைமுகத்துக்கு 'ஹை யாங் 24 ஹாவோ' என்ற சீன கடற்படைக் கப்பல் வந்துள்ளது.
அந்தக் கப்பல் இன்று திரும்பிச் சென்று விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ச்சி சீனாவில் இருந்து கொழும்புக்கு கப்பல் வந்திருப்பது தெரியும் என்றும், ஆனால் அது போர்க்கப்பலா என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சீனக் கப்பலின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.