இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கோவாவின் மொத்த மக்கள் தொகையில் 26.4 சதவீதம் பேரும், புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேரும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு நீரிழிவு இருந்தநிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமான சர்க்கரை நோய் தாக்கத்தை விட அதிகமாக சர்க்கரை இருப்பது, நீரழிவுக்கு முந்தைய நிலை என குறிப்பிட்டுள்ள ஐசிஎம்ஆர், நாட்டில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நிலையில் இருப்பதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 15.3 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளது.