பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை வீசி போலீசார் கலைத்துள்ளனர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, பாகிஸ்தான் ரூபாயில் 530 மில்லியன் மதிப்பிலான இடத்தை முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு சொந்தமான அல்காதிர் அறக்கட்டளைக்கு வழங்கியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த இம்ரான்கானை துணை ராணுவப் படையினர் கைது செய்து இழுத்துச் சென்றனர்.
இம்ரான்கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் ராணுவத்துடன் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கராச்சி, பெஷாவர், ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் ஆதரவாளர்களை கண்ணீர்புகை வீசி போலீசார் கலைத்தனர்.
போராட்டங்கள் பரவாமல் தடுக்க சமூக ஊடகங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டிருப்பதுடன், இஸ்லாமாபாத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. லாகூரில் ராணுவ உயர் அதிகாரி ஒருவரின் வீட்டினை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். முக்கிய சாலைகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டன.
முன்னதாக, இம்ரான் கான் வெளியிட்ட முன்பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தான் சிறையில் அடைக்கப்படலாம் என்றும், பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடலாம் என்று கூறியிருந்