உலகிலேயே முதல்முறையாக துபாயில், கார் நம்பர் பிளேட் ஒன்று 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
ரமலான் மாதத்தையொட்டி, அந்நாட்டு அரசர் முகமது பின் ராஷித், வறுமை நாடுகளில் 100 கோடி உணவு பொட்டலங்களை நன்கொடையாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அதற்கு நிதி திரட்ட, பேன்சி கார் நம்பர் பிளேட்டுகளும், செல்போன் எண்களும் ஏலம் விடப்பட்டன. கடந்த 2008ஆம் ஆண்டு, அபுதாபியில், ஒன்றாம் எண் நம்பர் பிளேட் ஒன்று 116 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே உலகளவில் அதிகபட்சமாக இருந்தது.
இந்நிலையில், 33 கோடி ரூபாய் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த P-7 என்ற நம்பர் பிளேட், இறுதியில் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
அதேபோல், செல்போன் எண் ஒன்று நான்கரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. ஏல நிகழ்ச்சி மூலம் மொத்தம் 220 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.