அமெரிக்காவில் தேர்தல் நிதியை ஆபாச நடிகைக்கு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார். அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறை.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், தனக்கும் தொடர்பு இருந்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் குற்றம் சாட்டி வந்தார். இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்கப் போவதாக கடந்த 2016ம் ஆண்டு அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சன் என்பவர், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து சமரசம் செய்தாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் பணம் ஹஷ் மணி என குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணம் ட்ரம்பின் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணம் என்பதால் வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் கொண்டு வந்த வழக்கில் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. இதற்காக புளோரிடாவில் வசிக்கும் டொனால்டு டிரம்ப் தனி விமானம் வாயிலாக நேற்று முன்தினம் நியூயார்க் சென்றார். தனக்கு சொந்தமான டிரம்ப் டவரில் தங்கிய இவர் பலத்த பாதுகாப்புக்கு நடுவே மன்ஹாட்டன் நீதிமன்றம் சென்றார்.
அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் முழுவரும் நிரம்பியிருந்ததால் அங்கு பலத்த காவல் போடப்பட்டிருந்தது. தொடர்ந்து தனது ஆதரவாளர்களைப் பார்த்து அவர் கையசைத்தபடி நீதிமன்றத்தின் உள்ளே சென்றார்.
நீதிமன்றத்தில் சரணடைந்த ட்ரம்ப், அமெரிக்க சட்ட விதிகளின் படி கைது செய்யப்பட்டார். கிரிமினல் வழக்கில் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவே முதன்முறை ஆகும்.. இதனைத் தொடர்ந்து அவர் வகித்த உயர் பதவியைக் கருத்தில் கொண்டு ட்ரம்புக்கு கை விலங்கு பூட்டப்படவில்லை.
தொடர்ந்து ட்ரம்பின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, தனது மீதான 34 குற்றச்சாட்டுக்களை ட்ரம்ப் மறுத்தார். பின்னர் ட்ரம்ப் மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடங்கும் என நீதிபதி கூறியதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசினார். அப்போது, அமெரிக்கா நரகத்தை நோக்கிச் செல்வதாகக் கூறி, அதிபர் ஜோ பைடனை மறைமுகமாகத் தாக்கினார். மேலும், அமெரிக்காவில் இதுபோன்று நடக்கும் என்று தாம் ஒருபோதும் நினைத்ததில்லை என்று குறிப்பிட்ட ட்ரம்ப், தான் செய்த குற்றம், நாட்டை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து அதனை அச்சமின்றி காப்பாற்றியதுதான் என்று கூறினார்.